Friday, March 11, 2011

அழகினம்

பாடுகின்ற புள்ளினம் அவள்
ஆடுகின்ற மயிலினம்
ஓடுகின்ற மானினம்! குரல்
கூவுகின்ற குயிலினம்
நாணுகின்ற நங்கையினம் கண்
நீந்துகின்ரம் மீனினம்
பேணுகின்ற தாயினம்! புருவம்
பாயுகின்ர வில்லினம்
குறும்பே குழந்தியினம் குழலோ
கருமையான முகிலினம்
நீயோ மலிரினம் நானோ
நாடுகின்ற வண்டினம்
அன்பே நீ அழகினம்! உன்னை
அழைக்கிறது என் மனம் !

நிலாப் பெண்


வைகறையில் துயில் எழுந்து
வெற்று வானத்தைப் பார்க்கிறேன்

இரவினில் வார்த்து வைத்த
வெள்ளி மீன்கள் காணவில்லை

வட்ட முகம் காட்டும்
வெள்ளித் தட்டையும் காணவில்லை

கண்டவர்கள் சொல்லுங்கள் என்றேன்
காரிருள் கவ்வும் மாலையில் வருமென்றனர்

எட்டி நின்றோர் சிலரிடம்
ஏன் இக்காலையில் முகம் காட்டவில்லைஎன்றேன்

அதோ! மலை முகட்டில் எழும்
எரிமலை ஏறி வருவாளோ!

பளிங்குமுகம் பழுத்து போமுன்
பதுங்கிடுவாளோ! ஆடவன் பார்வையில்

படுமுன் பருவ மகள்
பாய்ந்தோடி மறைந்தாளோ! இரவில்

இதயங் கலந்த இருவர்க்கெல்லாம்
இனிய விருந்தாய் அமையும் பாவையவள்!

Wednesday, March 18, 2009

மனிதா நீ ஒரு வானரம்

மனிதன் ஒரு வானரம்
அதனால்தான் தவுகின்றான்
மனதில், மார்க்கத்தில்
கனவில், கருத்தில்
கற்பனையில், காமத்தில்
கட்சியில், காட்சியில்
காதலில், வேளையில்
எழுத்தில், எண்ணத்தில்
வாயில், வழக்கத்தில்
வகுப்பில், வயதில்
வாலிபத்தில், வயோதிகத்தில்
வரைமுறை இல்லையா! அதனால் தான்
மனிதா நீ ஒரு வானரம்

Tuesday, December 2, 2008

பெருந்தலைவர் காமராசர்


படிக்காது பார்ஆண்ட பகலவன்! -எதிலும்

நடிக்காமல் நேர்நின்ற நாயகன்!

கல்விக்கு கண்கொடுத்த காமதேனு! -பள்ளி

கல்வியின்றி கலங்கண்ட கர்மவீரர்!

எத்தரையும் திருத்திநின்ற ஏந்தலர்! -புவியில்

எத்தரையும போற்றுகின்ற உத்தமர்!

பத்தரைத் தங்கமாய் வாழ்ந்தவர்! -பாரில்

இத்தரைப் புகழ்மணக்க உதித்தவர்!

காந்திமகான் வழிவந்த காவலர்! -மக்கள்

சாந்திக்காய் உழைத்திட்ட ஏவலர்!

சிறைகண்ட தியாகத்தின் சீலர்! -அன்னை

சிவகாமி பெற்றெடுத்த பாலர்!

நாடுகாத்த நல்லோர்க்கு சீடர்! -அதைக்

காடுஆக்க புகுந்தோர்க்கு வேடர்!

எளியோரின்அன்பான தோழர்! -கொடும்

வலியோரை வதைத்திட்ட வேழம்!

ஏழையாய் இன்னுயிரை ஈந்தோர்! -வாழ்வில்

வாழையாய் எந்நாளும் வாழ்ந்தோர்!

பெரியவர் நம்காம ராசர்! -பெரும்

புகழை பாடிநிதம் தொழுவோம்!

தலைக்கொடுப்போம் தமிழுக்காக

தலையும் கொடுப்போம்
தமிழுக்காக!-நம்
உயிரும் கொடுப்போம்
தமிழுக்காக!
இசைகள் பிறந்ததோ
இனிமைக்காக!-நாம்
புவியில் பிறந்ததோ
தமிழுக்காக! [தலை]

தமிழில் ஆர்வம்
துடிக்கின்றது!
உயிராய் உடலில்
கலக்கின்றது!
கவியாய் மண்ணில்
நடக்கின்றது!
அகிலம் முழுவதும்
மணக்கின்றது! [தலை]

மழலை மொழியில்
பிறக்கின்றது!
மாந்தர் வழியில்
ஒளிர்கின்றது!
இமயம் முடியில்
தவழ்கின்றது!
குமரி முனையில்
சிரிக்கின்றது! [தலை]

உலகில் வாழும்
மனிதர்க்கெல்லாம்
தமிழின் மேன்மை
தெரிகின்றது!
அண்டி வாழும்
தமிழருக்கோ
எதுதான் எளிதில்
புரிகின்றது? [தலை]